Monday 18 July 2011

a wonderful dream

இளைஞர்களும் வளர்ந்த இந்தியாவும்:
‘இந்தியா 2020  இல் வளர்ந்த நாடாக மாற வேண்டும்’ என்பதுதான், நம் நாட்டின் குறிக்கோள்.
வளமான நாடு என்றால் பொருளாதார வள மிக்க 100  கோடி மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே நமது நாட்டின் இலட்சியம்.
‘இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற நிலைமை மாறி – நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி, உடைய நல்ல இளைஞர்கள் இந்த நாட்டிற்குத் தேவை. இதற்குச் சந்தர்ப்பங்கள் இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றன.
இளைய சமுதாயம், எழுச்சி மிக்க எண்ணங்கள் கொண்ட இளைய சமுதாயம் – நம் நாட்டின் ஓர் அரும் பெரும் செல்வமாகும்.
“2020  -   இல் எப்படி இந்திய ஒரு வளமான நாடாக மற்ற வேண்டும்” என்ற எண்ணத்தை, நான் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தேன். அதை இப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்ள  விரும்புகிறேன்.
உங்கள் சிந்தனை ஒன்றுபட்டால் – உங்கள் செயல்கள் ஒன்றுபட்டால், ‘வளமான இந்தியா உருவாக வேண்டும்’ என்ற இலட்சியம் நிறைவேறும். அந்த இலட்சியம்  என்ன?
ஒளி படைத்த கண்ணினாய் வா, வா, வா!
1 . கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் இருக்கும்,சமூக – பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
2 . சுத்தமான தண்ணீரும், அனைவருக்கும் தேவையான எரிசக்தியும் – எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் நாடாக மாற்ற வேண்டும்.
3. விவசாயம், தொழில்கள், சேவைத்துறைகள் ஆகியவை ஒருங்கிணைந்து, மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
4. சமூக பொருளாதார வேறுபாடுகளை மீறி – பண்பாடு நிறைந்த ஒரு தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
5. விஞ்ஞானிகளுக்கும், அறிவார்ந்த வல்லுனர்களுக்கும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக – ஏற்ற ஓர் இடமாக – இந்தியாவை நாம் மாற்ற வேண்டும்.
6. வேறுபாடு இல்லாமல், தரமான மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
7. ஒரு பொறுப்பான, வெளிப்படையான உஊழல்ற ஆட்சிமுறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
8. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு,கல்லாமை களையப்பட்டு, பெண்களுக்கும் குழைந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதயத்தில் இருக்கும் யாரும், ‘நாம் தனிமைப்படுத்தப் பட்டுவிட்டோம்’ என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
9. ஓர் இனிமையான வளமான பாதுகாப்பு மிகுந்த அமைதியான சுகாதாரமான வளமிக்க வளர்ச்சி பாதையை நோக்கிப் பீடு நடை போடக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
10. உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்திச் செல்லக் கூடிய தலைவர்களைப் பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும்.
சுவாமி விவேகானந்தரின் கனவு:
இப்படிப்பட்ட இந்தியாவை நாம் படைக்க வேண்டுமானால் – எழ்ச்சி மிக்க எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள் இன்றியமையாத தேவை. அப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்குவதுதான் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் இலட்சியம்.
“எழுச்சி மிக்க இளைஞர்களை உருவாக்க வேண்டும்” என்பதுதான் சுவாமி விவேகானந்தரின் கனவு. சுவாமி விவேகானந்தர் விரும்பிய அப்படிப்பட்ட இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் தாங்கள் எதிர்காலம் பற்றிய பயமே இல்லாமல் வாழ வேண்டும். என் முன்னாள் பல காட்சிகள் தோன்றுகின்றன.
ஒரு காட்சியில் 20 வயதிற்குள் இருக்கும் எல்லா இளைஞர்களையும் பார்க்கிறேன். அவர்களுடைய மலர்ந்த முகங்களைப் பார்க்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல கல்வியின் பயனாக – அவர்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவர்களாகவும், பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாகவும், நாட்டிற்கு நல்ல குடிமகன்களாகவும் திகழ வேண்டும்.
‘இளைய சமுதாயத்தை, எப்படி அறிவார்ந்த சமுதாயத்திற்கு அழைத்து செல்வது?’ என்பது மிகவும் பெரிய ஒரு பணி.
“அறிவார்ந்த சமுதாயத்தின் ஆரம்பம் என்ன? அதை அடைய வேண்டும் என்றால், அதற்கு உரிய அறிவின் இலக்கணம் என்ன?” என்று, இப்போது பார்ப்போம்.
அறிவின் இலக்கணம்
அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா? அறிவின் இலக்கணம் என்று சொல்லப்படுவது எது? அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அதற்கு உரிய ஒரு சந்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அறிவு = கற்பனைச் சக்தி + மனத்துய்மை + மனஉறுதி.
கற்பனைச் சக்தி
கற்பது கற்பனைச் சக்தியை வளர்க்கிறது,
கற்பனைச் சக்தி சிந்திக்கும் திறமையைத் தூண்டுகிறது,
சிந்தனை அறிவை வளர்க்கிறது,
அறிவு உன்னை மகானாக்குகிறது.
கற்பனைச் சக்தி உருவாவதற்குக் குடும்பச் சூழ்நிலையும், பள்ளிச் சூழ்நிலையும் தான் மிகவும் முக்கிய காரணங்களாக அமையும். அந்தச் சூழ்நிலை உருவாவதற்கு என்ன வேண்டும்? ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மனத்தூய்மை இருக்க வேண்டும்.
மனத்தூய்மை
உங்களையெல்லாம் இங்கு பார்க்கும்போது, எனக்கு ஒரு தெய்விகப் பாடல் நினைவுக்கு வருகிறது. நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைத் திரும்பிச் சொல்வீர்களா? பசி நேரமா? மிகவும் பசியாக இருக்கிறதா?
நான் சொல்வதை நீங்கள் சொல்வீர்களா?
(குழுமியிருந்த மக்கள், “சொல்கிறோம்” என்று கூறினார்கள்.)
(அதைத் தொடர்ந்து டாக்டர் கலாம், பின்வரும் பாடலை ஒவ்வொரு வரியாகக் கூறினார். அவர் கூறியதை, மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் திருப்பிக் கூறினார்கள்.)
எண்ணத்தில் தூய்மை இருந்தால்,
நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்,
குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால்,
நாட்டில் சீர்முறை உயரும்.
நாட்டில் சீர்முறை உயர்ந்தால்,
உலகத்தில் அமைதி நிலவும்.
(இப்போது டாக்டர் கலாம் கூறுவதைக் குழுமியிருந்தவர்கள் திருப்பிச் சொல்லவில்லை. டாக்டர் கலாம் உரையைத் தொடர்கிறார்.)
‘எல்லாவற்றிற்கும் அடிப்படை மனத்தூய்மை’ என்பதை, இந்த சிறிய கவிதை உங்களுக்குத் தெளிவாக்கி இருக்கும் என்று நம்புகிறேன்.
மனத்தூய்மை எங்கிருந்து வரும்? இதை நாம் மூன்றே மூன்று பேர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள முடியும்.
அவர்கள் யார்? அவர்கள் 1 . தாய், 2 .தந்தை, 3 .ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியவர்கள்தான்.
மனஉறுதி
(இப்போது மாநாட்டில் குழுமியிருந்தவர்கள், டாக்டர் கலாம் சொல்வதைத் திருப்பிச் சொல்கிறார்கள்.)
“புதிய எண்ணங்களை உருவாக்கும் மாருதி இன்று என்னிடம் மலர்ந்திருக்கிறது.’எனக்கு’ என்று ஒரு புதிய பாதையை உருவாக்கி, அதில் நான் பயணம் செய்வேன். ‘முடியாது, முடியாது, முடியாது’ என்று எல்லோரும் சொல்வதை, ‘என்னால் செய்ய முடியும்’ என்ற மனஉறுதி என்னிடம் உருவாகிவிட்டது.
“‘புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை என்னால் செய்ய முடியும்’ என்ற மனஉறுதி, என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது. இந்த மன உறுதிகள்  அனைத்தும் இளைய சமுதாயத்தின் சிறப்புகளாகும், அஸ்திவாரமாகும்.”
“‘இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான், என் கடின உழைப்பாலும், மன உறுதியாலும் தோல்வியைத் தோல்வியடையச் செய்து  வெற்றி பெற்று என் நாட்டை வளமான நாடாக்குவேன்’ என்று இளைஞர்கள் உறுதியாக நினைக்க வேண்டும்.”
(இவ்விதம் அனைவரும் சொல்லி முடித்த பிறகு, டாக்டர் கலாம் தன் சொற்பொழிவைத் தொடர்கிறார்.)
இளைய பாரதத்தினாய் வா, வா, வா!
நண்பர்களே! ‘உள்ளத்தில் உறுதி வேண்டும்’ என்று சொன்னேன்.
அந்த மனஉறுதி எப்படி வரும்? யார் மூலம் வரும்? நல்ல மனிதர்கள், நல்ல ஆசிரியர்கள், நல்ல புத்தகங்கள் ஆகியவை மனதை உறுதி பெற வைக்கும். இந்த மனஉறுதி – ‘நாம் எந்தக் காரியத்தையும் செய்யலாம், செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும்’ என்ற உறுதியையும், நம்பிக்கையையும் அளிக்கிறது.
மனதில் உறுதி இருந்தால், வெற்றி அடைவீர்கள் – நீங்கள் நிச்சயமாக வெற்றி அடைவீர்கள்.
‘ஆதாவது, 2020 – க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும்’ என்ற இலட்சியத்தை நாம் அடைய வேண்டுமானால் – அது இந்தியாவின் 54  கோடி இளைஞர்களின் பங்களிப்புடன்தான் சாத்தியமாகும்.
அனைத்து துறைகளிலும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு, முதலில் அறிவார்ந்த இளைஞர்களை நாம் தயார் செய்ய வேண்டும்.
இளைஞர்களின் பொன்னான நேரம் – நல்ல திறமையை, நல்ல அறிவை,நல்ல ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளும் விதத்தில் அமைய வேண்டும்.
எனவே இத்தகைய இளைஞர்களைச் செம்மைப்படுத்தும் முயற்சிகள் வெற்றியடைவதற்கு என் நல்வாழ்த்துகள்.  
                                                                                 -டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

2 comments:

  1. சொல், செயல், சிந்தனைகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சிலரால் உலகையே ஆட்டிவைக்க முடியும்.
    -சுவாமி விவேகானந்தர்.
    நல்ல கருத்துகள் அனைவரிடமும் செல்ல வேண்டும்


    http://vivekanandadasan.wordpress.com/

    ReplyDelete